சிவன் கோயில் தல புராண விளக்கம், திருப்பணி அறிவிப்பு

தல புராணம் விளக்கம்

இன்ன நற்றலம் தாமரங்கோட்டை என்றிசைப்ப
வின்னதி யாவையும் தருமய நகரின் மிக்கிலங்கு
மன்னு சீகண்ட நாதனாங்கருள் செயல் வாம
மன்னு தாயறம் வளர்த்த நாயகி பெயர் வயக்கும்

அறம் வளர்ப்பது நாமிரு நாழிநெல்லாலெத்
திறனிவர்க் கோடச்செயல் விரிக்குதுமெனத் தெளிந்தம்
முறையளித்த நெல்லால் உலகூட்டு மூதகசீர்
நிறைவளர்த்த வேளாளர் கூட்டம் அவணிலாவும்
….

சூதனவனபுராணம் – இராமன் மந்திரோபதேசம் பெற்ற சருக்கம்

திருப்பாற்கடலில் அமுதம் பெறவேண்டி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையை மத்தாகவுவும் வாசுகி என்ற அரவினை நாணாகவும் கொண்டு கடைந்த காலத்தில் திருப்பாற்கடலினின்றும் விடம் எழுந்து பரவியது. அவ்விட வேகந்தாங்க முடியாமல், தேவர்கள் கூட்ட தலைமையான திருமாலின் மேனி கருகியதால், தேவர்கள் கூட்டத்தினருடன் ஓடி அலைந்து, இத்தலத்து வந்து சிவபெருமானிடம் முறையிட்டு விடவேகத்தினின்றும் அனைவரையும் காக்க வேண்டினர்.பெருமான் மனமிறங்கி, அவ்விடத்தினை திரட்டி சுருக்கி சிறிதாக்கி உண்டார். அருகிலிருந்த அம்பிகை உலகம் உய்யக் கருதியும் பெருமானின் உடலுள் விடம் செல்லாதிருக்கவும் இறைவன் கண்டத்தைப் பிடித்து தடுத்தருளினார். விடம் கண்டத்திலேயே தங்கியதால், “கண்டேசுவரர்” எனும் திருநாமம் பெற்று விளங்கி தேவர்கள் முதல் அனைவருக்கும் அருள் புரிந்து, மீண்டும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றுய்யவும் அருளினால்,இறைவி அறம் வளர்த்த நாயகி என்னும் திருநாமத்தோடு விளங்கிவருகிறார்.

ஆலயச் சிறப்புகள்

எவ்வாலயத்திலும் இல்லாவகையில் அருள்மிகு பைரவர் ஆலய மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.பிரார்த்தனைக்குரிய மூர்த்தியாய் விளங்கி,புத்திரப்பேறும் மற்ற நலங்களும் பெறவேண்டி சிறப்பு அபிஷேகம்,வடைமாலை முதலியன நிகழ்த்தி பக்தர்கள் நலம் பெறுவது கண்கூடான ஒன்று.

கண்டேசுவரப் பெருமான் விடமுண்டு தேவர்கள் முதல் யாவர்ககும் அருள் புரிந்து காத்தமைநினைவாக மாதம் இரு பிரதோஷ காலங்களிலும் வழிபாடு சிறப்புற தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

ஆலயத்தின் முன்புறம் “தாமரை நிறைந்த திருக்குளம்” அமைந்துள்ளது பல்லாற்றானும் சிறப்பு வாய்ந்த இத்தலம் தாமரங்கோட்டை எனும் திருப்பெயரால் சிறப்புப்பெற்று விளங்கி வருகிறது.விவசாயத்தினை முக்கியத் தொழிலாகக் கொண்ட,வேளாளர் பெருமக்கள் நிறைந்து வாழ்கின்றனர்.அப்பெருமக்களில் சிறந்தவரான அமரர்,திரு.காரிமுத்து வேளாளர் என்பவரும். அமரர். திரு. சுப்ரமணிய வேளாளர் என்பவரும் பெருமானிடம் பெரு ஈடுபாடு கொண்டு ஆலயத்தை விரிவுபடுத்தி திருப்பணிகள் செய்து, நஞ்சை, புஞ்சை நிலங்கள் அளித்து வேளாளர்களின் நான்கு கரைகாரர்களையும் பங்கு பெறச்செய்து, அனைவர்களின் வழிபாட்டுத்தலமாகவும் சிறந்து விளங்கி வருகிறது.

தலப்பெயரும், சுவாமி, அம்பிகையின் திருநாமங்களும், ஊரில் வாழ்ந்துவரும், “வேளாளர்கள்” செய்தொழில் “விவசாயம்” என்ற குறிப்புகளும் கம்பராமாயணம் சூதனவனபுராணம்-இராமன் மந்திரோபதேசம் பெற்ற சருக்கத்தில் மேற்கொண்டுள்ள 157, 158 ஆகிய இருபாடல்களும் தெளிவுற விளங்கும், இது பழமையான வைப்புத்தலமாகும்.

இவ்வாலயத்தில் விஜய தசமி, திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம் ஆகிய விழாக்கள் நடைபெறுவதுடன் வைகாசி விசாகத்தில் முக்கியப் பெருந்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்தலம் பக்தர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் பிரார்தனைக்குரிய தலமாக விளங்கிவருவது பெரும் சிறப்பு.

திருப்பணி

இத்திருத்தலத்திற்கு கடைசியாக 28.1.2007ல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இத்திருக்கோயிலில் கீழ்கண்ட மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடை பெறுகின்றன.

1. இராஜகோபுரம் திருப்பணி 4,10,000
2. கருவரை 2,14,750
3. அம்பாள் சன்னதி 1,90,750
4. விநாயகர் சன்னதி 1,01,500
5. முருகன் சன்னதி 1,06,400
6. நடராஜர் சன்னதி 90,000
7. பைரவர் சன்னதி 92,000
8. மணி மண்டபம் 17,450
9. வெளி விநாயகர் 26,100
10. சண்டிகேஸ்வரர் 40,000
11. திருமதில்சுவர் 2,02,000
12. மடப்பள்ளி 40,000
13. உள்மண்டபம் தரைத்தளம் 95,000
14. வெளிப்பிரகாரம் 2,00,000
15. தட்டுக்கல் பரப்புதல் 1,52,000
மொத்தம் 19,77,950

இத்திருக்கோயிலில் விநாயகர் சன்னதிக்கு மாண்பபுமிகு,வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய இணை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் ரூ.50,000/- மும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.ரெங்கராஜன் அவர்கள் ரூ.25,000/- மும் நன்கொடையாக அளித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்றும் முருகன் சன்னதி திருப்பணி வேலைகள் முழுவதும் தாமரங்கோட்டை குமரன் ஆசிரியர் பயிற்சி நிறுவனர் தாளார் திரு.ஆர்.வீரப்பன் அவர்கள் ஏற்றுக்கொண்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்றும் பைரவர் சன்னதி திருப்பணிக்கு தாமரங்கோட்டையை சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் டாக்டர்.செந்தில் அவர்கள் ரூ.37,000/-மும் சுந்தரநாயகிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ஏ.எம்.மணிமாறன் ரூ.25,000/-மும் நன்கொடையாக அளித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்ற திருப்பணி வேலைகளுக்கு தங்களால் இயன்ற நிதியுதவி செய்து இறைவனின் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
சி.முருகப்பன்
தலைவர்,திருப்பணிக்குழு
பொ.ஜெயராமன்
செயலாளர்/ பொருளாளர்
நிர்வாக அதிகாரி

நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி

C. முருகப்பன்
தாமரன்கோட்டை
தலைவர், திருப்பணிக்குழு,
போன்: 04373 – 283141
செல்: 99429 25933

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *