திமுக வேட்பாளர் பழநி மாணிக்கத்தின் வாக்குறுதிகள்

பழநி மாணிக்கம் தஞ்சாவூர், ஏப். 15: நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் மத்திய அமைச்சராக இருந்துள்ளதால் எந்த உயர்நிலை அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு சொல்லியவை மட்டுமன்றி, சொல்லாதத் திட்டங்களையும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என்றார் தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.
தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடையே கூறியது: “எதிர்க்கட்சி வேட்பாளர் அரியலூர்- தஞ்சாவூர் ரயில் சேவைத் திட்டத்தை உடனே செயல்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நான், முதன் முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும் இதே வாக்குறுதியை அளித்தேன். ஆனால், திட்டங்களை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தஞ்சாவூரில், கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன் கிடையாது என்று விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட காலகட்டத்தில், எந்த நிபந்தணையும் இன்றி விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி கடன் அளிக்கச் செய்தேன்.

இந்தியாவுக்கான கடன் கொள்கையை வகுத்ததிலும் முக்கிய பங்காற்றியுள்ளேன். ஐஓபி வங்கியின் தலைவர் குப்தா தலைமையில் தஞ்சாவூரில் 2004-ல் எனது முயற்சியால் நடத்தப்பட்ட கூட்டத்தில்தான் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளின் இந்தியாவுக்கான புதிய கடன் கொள்கை முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்தே ரூ. 80,000 கோடியாக இருந்த நாட்டின் ஐந்தாண்டு கடன் திட்டம் ரூ. 2,40,000 கோடி (3 மடங்காக) உயர்த்தப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் இன்று வரை கல்விக் கடன் வழங்குவதில் தஞ்சாவூர் மாவட்டமே முன்னணியில் உள்ளது. இதன் மூலம் கிராமத்தில் 10 பேராவது பொறியாளராகவோ, தொழில்கல்வி பெறவோ வாய்ப்பு உருவாகியுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதிலும் தஞ்சை மாவட்டமே முன்னணியில் உள்ளது.
எனது முயற்சியால்தான் தஞ்சாவூர்- நாகை, தஞ்சாவூர்- புதுக்கோட்டை, தஞ்சாவூர்- திருச்சி, தஞ்சாவூர்- பெரம்பலூர், தஞ்சாவூர்- கும்பகோணம் சாலைகள் தேசிய நெஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி 4 வழிச்சாலைப் பணிகளும் அதன் தொடர்ச்சிதான்.

தற்போது தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழியாக கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கும் வகையிலான 4 வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை சுற்றுச் சாலையின் மீதி பகுதியை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
2006 வரை எந்த ஒரு அரசுக் கலைக் கல்லூரியும் தொடங்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. ஆனால், அந்தச் சட்டத்தை மாற்றி எனது முயற்சியால் ஒரத்தநாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு அரசு பொறியியல் கல்லூரியும் முதல்வரிடம் பேசி வாங்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தஞ்சை மாவட்டத்தில் என்ன மாதிரியான தொழில் திட்டங்களை தொடங்க முடியும்? எரிபொருளுக்காக காட்டாமணக்கு சாகுபடி செய்தால் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருச்சி விமான நிலையம் முழு அளவில் செயல்படத் தொடங்கும்போது இப்பகுதியின் விளைப் பொருள்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பு உருவாகும்.

தஞ்சை மக்களின் நீண்டகாலப் பிரச்னையாக உள்ள ரயில்வே கீழ்பாலத்தில் தேங்கும் மழை நீரை குழாய் மூலம் பாசன வாய்க்காலில் விடும் திட்டம் விரைவில் செய்யப்படும்.
தஞ்சாவூர்- அரியலூர், மன்னார்குடி- நீடாமங்கலம் புதிய ரயில் பாதைக்கான திட்டம் முதல்வரின் அனுமதியுடன் நிதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரும், ரயில்வே அமைச்சரும் ஒப்புதல் அளித்து விட்டனர். வரும் துணை நிதி நிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிடும்.
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ரயில்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக வருந்த வேண்டியதில்லை. மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணிக்காக கொள்ளிடம் ஆற்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடைக்குள் பணிகள் முடிந்து விடும். அதன்பின்னர் இருந்ததை விடவும் கூடுதல் ரயில்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அண்மையில் தொடங்கப்பட்ட கல்லணைக் கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்தால் இனி கடைமடை விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 100 கோடி கேட்கப்படும்.

தஞ்சாவூர் விமானப் படைத் தளத்தில் ரன்வே, சிக்னல், விமான நிறுத்தம் தயார் நிலையில் உள்ளது. புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப் படைக்கான ஒரு பகுதியை ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு அளிக்கப்பட்டவுடன் பயணிகள் விமானச் சேவை விரைவில் தொடங்கப்பட்டு விடும்’ என்றார் பழநிமாணிக்கம்.

செய்தி மூலம் : நன்றி – தினமணி

மேலும் செய்திகள்: நன்றி – Chennai Online Rs 80,000 cr loans waived to farmers

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *