யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பான தினமணி செய்தி

பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் திரு யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பாக தினமணி நாளிதழின் இணையதளத்தில் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

பட்டுக்கோட்டை, ஏப். 13: பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேர் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனுக்குப் போட்டியாக, அதே கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஆர். மாரிமுத்து மகனுமான யோகானந்தம் போட்டியிடுகிறார்.

அவரைப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு சமரச முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், யோகானந்தம் போட்டியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர் யோகானந்தம், அவரது ஆதரவாளர்களான வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் துவரங்குறிச்சி கே.ஆர். நாடிமுத்து (80), வேப்பங்குளம் எஸ். திருஞானம் (58), யோகானந்தம் நண்பர் செம்பாளூர் குருநாதன் (48) ஆகியோர் வாக்குப் பதிவைப் பார்வையிடுவதற்காக புதன்கிழமை பிற்பகல் காரில் பொன்னவராயன்கோட்டை வாக்குச் சாவடிக்குச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனின் ஆதரவாளர்களான பொன்னவராயன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் வை. நடேசன் உள்ளிட்ட சிலர் யோகானந்தத்தை திட்டிப் பேசியதுடன், அவருடன் சென்ற 3 பேரையும் உருட்டுக் கட்டையால் தாக்கினராம். மேலும் அவர்கள் யோகானந்தம் சென்ற கார் கண்ணாடியையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த திருஞானம் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையிலும், மற்ற இருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பி. செல்வராஜ் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாழக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்நது மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல ஆலத்தூர், தாமரங்கோட்டையில் யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டது.

நன்றி : தினமணி

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

2 thoughts on “யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பான தினமணி செய்தி

  1. 1st place yogonatham.2nd place senthil 3rd place rengarajan and 4th place murali ganesh this is my calculation sure 100% rangarajan splits lot of money,s money does not work this election.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *