தாமரை அருள்மிகு கண்டேசுவரர் ஆலயம்

எழில்மிகு ஊராகிய‌ தாம‌ர‌ங்கோட்டையில் ஊரின் ஈசான்ய‌ மூலையில் அம‌ர்ந்து ம‌க்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் தெய்வ‌மாக‌ விள‌ங்கும் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத‌ கண்டேஸ்வர சுவாமியின் திருத்த‌ல‌ம்தான் இது. இத்த‌ல‌ம் ஊரின் பிர‌தான‌ சாலையிலிருந்து சுமார் 1/2 கி.மீ தூர‌த்தில் வாட்டாகுடி செல்லும் சாலைய‌ருகே அமைந்துள்ள‌து.

தல வரலாறு:

இன்ன நற்றலம் தாமரங்கோட்டை என்றிசைப்ப
வின்னதி யாவையும் தருமய நகரின் மிக்கிலங்கு
மன்னு சீகண்ட நாதனாங்கருள் செயல் வாம
மன்னு தாயறம் வளர்த்த நாயகி பெயர் வயக்கும்

அறம் வளர்ப்பது நாமிரு நாழிநெல்லாலெத்
திறனிவர்க் கோடச்செயல் விரிக்குதுமெனத் தெளிந்தம்
முறையளித்த நெல்லால் உலகூட்டு மூதகசீர்
நிறைவளர்த்த வேளாளர் கூட்டம் அவணிலாவும்
….

சூதனவனபுராணம் – இராமன் மந்திரோபதேசம் பெற்ற
சருக்கம்

திருப்பாற்கடலில் அமுதம் பெறவேண்டி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்ற அரவினை நாணாகவும் கொண்டு கடைந்த காலத்தில் திருப்பாற் கடலினின்றும் விடம் எழுந்து பரவியது. அவ்விட வேகந்தாங்க முடியாமல், தேவர்கள் கூட்ட தலைமையான திருமாலின் மேனி கருகியதால், தேவர்கள் கூட்டத்தினருடன் ஓடி அலைந்து, இத்தலத்து வந்து சிவபெருமானிடம் முறையிட்டு விடவேகத்தினின்றும் அனைவரையும் காக்க வேண்டினர்.பெருமான் மனமிறங்கி, அவ்விடத்தினை திரட்டி சுருக்கி சிறிதாக்கி உண்டார். அருகிலிருந்த அம்பிகை உலகம் உய்யக் கருதியும் பெருமானின் உடலுள் விடம் செல்லாதிருக்கவும் இறைவன் கண்டத்தைப் பிடித்து தடுத்தருளினார். விடம் கண்டத்திலேயே தங்கியதால், “கண்டேசுவரர்” எனும் திருநாமம் பெற்று விளங்கி தேவர்கள் முதல் அனைவருக்கும் அருள் புரிந்து, மீண்டும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றுய்யவும் அருளினார். இறைவி அறம் வளர்த்த நாயகி
என்னும் திருநாமத்தோடு விளங்கிவருகிறார்.

த‌ல அமைப்பு:

இத்த‌ல‌ம் பழ‌ம்பெறும் கால‌த்தில் க‌ட்ட‌ப‌ட்டதால் அக்கால‌
நாக‌ரீக‌த்தின்ப‌டி ச‌துர அமைப்பில் அமைந்துள்ள‌து.

தல அமைப்பு வரைபடம்
தல அமைப்பு வரைபடம்

இவ்வால‌ய‌த்துள் மூன்று முக்கிய‌ ச‌ன்னிதான‌ங்கள் உள்ள‌ன‌. ந‌டுவில் சிவ‌ன், அம்பாள், பைர‌வர் கொண்ட‌ பிர‌தான‌ ச‌ன்னிதான‌மும் இவ‌ற்றின் பின்புறம் இரும‌றுங்கிலும் விநாய‌கர் மற்றும் முருக‌ன் ச‌ன்னிதான‌மும் அமைந்துள்ள‌ன. பிர‌தான‌ ச‌ன்னிதானத்தின் முன்புற வலதுபக்கத்தில் ந‌வ‌க்கிர‌கங்க‌ளும் ம‌ற்றும் சில‌ தெய்வ‌ங்க‌ளும் உள்ள‌ன‌. இட‌துப‌க்க‌த்தில் ம‌ட‌ப்ப‌ள்ளி அமைந்துள்ள‌து. பிர‌தான‌ ச‌ன்னிதானத்தில் இத்த‌லத்தின் மூலவரான அருள்மிகு கண்டேஸ்வர சுவாமியும் அதன் அருகருகே அம்பாள் மற்றும் பைரவர் அறையும் உள்ளது. இக்கோயிலின் இராஜ‌கோபுர‌ம் ஐந்து நிலைக‌ளை கொண்ட‌து. சுதை வேலைபாடுக‌ள் குறைவாக‌ இருந்தாலும் அன்னார்ந்து பார்க்க‌ கைக‌ள் இர‌ண்டும் குவிய‌ ம‌றுப்ப‌தில்லை.

த‌ல‌ச் சிற‌ப்பு:

எத்த‌ல‌த்திலும் இல்லாத‌ சிற‌ப்பு இத்த‌ல‌திற்கு உண்டு. சிவால‌ய‌ங்க‌ளில் காவ‌ல் தெய்வ‌மாக‌ விள‌ங்கும் பைர‌வ‌ர் பிர‌தான‌ ச‌ன்னிதானத்தின் சுவாமி அம்பாள் அருகே அவைக‌ளை போன்றே த‌னிஅறையில் சுமார் ஐந்து அடி உய‌ர‌த்தில் கால‌பைரவ கோல‌ம்பூண்டு அருள்பாலிக்கிறார். இவ‌ரை பிள்ளைபேறு இல்லாத‌ த‌ம்ப‌தியின‌ர் வ‌ழைப் ப‌ழ மாலை அணிவித்து அபிஷேக‌ ஆராத‌னை செய்து இறைவ‌னின் திருவ‌ருளை பெறுகிறார்க‌ள். மேலும் பைர‌வருக்கு உக‌ந்த‌ நாளான‌ திங்க‌ள் ம‌ற்றும் வெள்ளிக் கிழமைகளில் வடைமாலை சாத்தியும் ஆராதிக்கின்றனர். இவ‌ருக்கு உக‌ந்த‌ திதியான‌ பௌர்ண‌மி, அம்மாவாசை, ந‌வ‌மி திதிக‌ளிலும் சிறப்பு அபிஷேக‌ ஆராத‌னை செய்து பைர‌வ‌சுவாமியின் திருவ‌ருளை பெறும் ப‌க்த‌ர்க‌ள் ப‌ல‌ர். இங்கு கிருஷ்ண‌ப‌ட்ச‌த்தில் வ‌ரும் ந‌வ‌மிதிதிய‌ன்று அபிஷேக‌ம் ந‌ட‌த்தும் குழு ஒன்றும் செய‌ல்ப‌டுகிற‌து. மேலும் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ப‌க்த‌ர்கள் குழு சேர்ந்து அபிஷேக‌ ஆராத‌னை செய்வது மட்டுமல்லாமல் பெரும் அளவில் அன்னதானமும் செய்கின்றனர்.

வழிபாடு:
இத்த‌ல‌த்தில் தினசரி பின்வ‌ரும் கால அள‌வோடு ஐந்து கால பூஜைகள் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன.

காலை ந‌டைதிற‌ப்பு‍‍‍‍‍:6.00க்கு
1)ச‌ந்தியா வ‌ந்த‌ன‌ம்:6.30
2)காலை பூஜை :9.00
3)உச்சிகால‌ம் :11.00
காலை ந‌டைசாத்த‌ப‌டுவ‌து :11.30
மாலை ந‌டைதிற‌ப்பு‍‍‍‍‍ :3.00க்கு
4)ஷாய‌ர‌ட்சை :6.00
5)அர்த‌ஜாம‌ம் :8.30
இர‌வு ந‌டைசாத்த‌ப‌டுவது:8.45

விழாகாலங்களில் இந்த கால அளவு மறுதலுக்குட்பட்டது.

கடைசிகால‌ பூஜையின் போது குறைந்தது இரண்டு துறவிகளுக்கேனும் அன்னம் வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்கு தமிழ் மற்றும் வடமொழியில் அர்ச்சனை செய்யப்படுகிறது. மாலை 6.30 ம‌ணி முத‌ல் 7.00
ம‌ணிவ‌ரை த‌மிழ் திரும‌றைப்பாக்கள் ஓதுவார் மூர்த்தியால் பாட‌ப்ப‌டுகிற‌து. சுற்றுவ‌ட்ட பகுதி கோயில்களில் எந்த கோயிலிலும் இல்லாது இந்த கோயிலில் மட்டும் திரும‌றைப்பாக்கள் பாட‌ப்ப‌டுவ‌து ஊர் ம‌க்க‌ள் தாங்க‌ள் செய்த‌ புண்ணிய‌மாக‌ க‌ருதுகிறார்க‌ள். இங்கு உள்ள‌ ஓதுவார் ப‌ணிஓய்வு பெற்ற‌போதிலும்,அர‌சால் மாற்று ஓதுவார் நியமிக்க‌ப‌டாத நிலையிலும் அனுப‌வ‌ம் மிகுந்த‌ அதே ஓதுவார் கொண்டு தொட‌ர்ந்து திரும‌றைபாசுரங்கள் பாடப்படுவது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுதும்
திருப்பள்ளியெழுச்சி காலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை ந‌டைபெறுகிற‌து. இவ்வ‌ழிபாட்டில் சுவாமிக‌ளுக்கு அபிஷேக‌ ஆர‌த‌னை செய்தும் தமிழ் திரும‌றைப் பாசுரங்கள் பாடியும் இறைவனை பள்ளியெழுப்புகிறார்கள்.

த‌ல‌ விருச்ச‌‌ம்:
த‌ல‌விருச்ச‌ம் என‌ குறிப்பிடும்ப‌டியாக‌ எதுவும் இல்லாது இருந்தாலும், இவ்வால‌ய‌ பிர‌கார‌ங்க‌ளை சுற்றிலும் கிடைப்ப‌தற்கு அரிதான‌ முக்கிய‌ ம‌ர‌ங்க‌ளான‌ வண்ணி ம‌ற்றும் வில்வ‌ம் ம‌ர‌ம் உள்ள‌ன‌. மேலும் கோயிலின் அருகாமையில் ந‌ந்த‌வ‌ன‌ம் ஒன்றும் அமைக்கப்ப‌ட்டுள்ளது. இங்கிருந்து அனைத்துகால‌ பூஜைக‌ளுக்கும் ம‌ல‌ர்க‌ள் எடுக்கப‌டுகிற‌து. த‌ற்ச‌ம‌ய‌ம் ப‌ராம‌ரிப்பின்றி அழியும் தருவாயில் உள்ள‌து.

திருக்குள‌ம்:
ஆல‌ய‌ வாயிலின் ச‌ற்றுமுன்பே தாம‌ரைபூக்க‌ள் நிறைந்த‌ குளம் உள்ள‌து. இக்குள‌ம் கிட்டதட்ட சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத‌ன் மையப்ப‌குதி சுமார் இருப‌து அடி ஆழ‌ம் கொண்ட‌தாகும். இக்குள‌க் க‌ரையின் அர‌ச‌ம‌ர‌த்தடியில் தான் வ‌ல்லப விநாய‌க‌ர் ஆல‌ய‌ம் அமைந்துள்ள‌து. இவ்வால‌ய‌ம் முழுமுத‌ற் க‌ட‌வுளான‌ மூத்த‌வ‌னை வ‌ழிப‌ட்டு பின் சுவாமியின் ஆல‌ய‌திற்கு செல்லும் வ‌கையில் அமைந்துள்ள‌து. இங்கு ம‌ணமாகாத‌ க‌ன்னிய‌ர்க‌ள் அதிகாலையில் எழுந்து அர‌ச‌ ம‌ர‌திற்கு த‌ண்ணீர்
ஊற்றி ம‌ர‌த்தை வ‌ல‌ம்வ‌ந்து முழும‌ன‌தோடு இறைவ‌னை வ‌ழிப‌ட‌வே விரைவில் ம‌ண‌மாக‌ பெறுவ‌து திண்ணம். மேலும் இக்குள‌ம் எக்கால‌த்திலும் வ‌ற்றா த‌ண்ணீர் கொண்டு விள‌ங்குவதால் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் திவ்ய நீர்நிலையாக‌ விள‌ங்குகின்ற‌து.

விழாக்க‌ள்:
சைவ‌ச‌ம‌ய‌த்தின் முக்கிய‌ விழாவாக‌ க‌ருத‌ப்ப‌டும் சிவ‌ராத்திரி,
திருவாதிரை, ந‌வ‌ராத்திரி என‌ அனைத்து விழாக்க‌ளுமே த‌னித்த‌னியே ஒவ்வொரு வ‌கைய‌ராக்களை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் அதற்கென‌ பொருப்பேற்று அத‌னை செவ்வ‌னே செய்து வ‌ருகிறார்க‌ள். [வ‌கைய‌ரா ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ விழாக்கள் விவரம் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தால் விவ‌ர‌ங்க‌ள் வ‌ர‌வேற்க்க‌ப்ப‌டுகிற‌து.]

சிவ‌ராத்திரி: தாண்ட‌வேளாள‌ர் வ‌கைய‌ரா
திருவாதிரை: ஆண்டிவேளாள‌ர் வ‌கைய‌ரா
ந‌வ‌ராத்திரி : தெற்குதெரு வ‌கைய‌ரா

திருவிழா:
ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாத‌ம் விசாக‌ ந‌ட்ச‌த்திர‌ தின‌த்த‌ன்று திருவிழா ந‌டைபெறுகிற‌து. இவ்விழா ஒன்ப‌து நாட்க‌ள் முன்பே தொட‌ங்கி தொட‌ர்ந்து ப‌த்து நாட்க‌ளுக்கு ந‌டைபெறுகிற‌து. இவ‌ற்றுள் தேர், தெப்ப‌ம், காவ‌டி, என‌ ப‌ல்வேறு வ‌கையில் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து. [நிக‌ழ்ச்சி நிர‌ல் பற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்றன.]

மூர்த்தியும் கீர்த்தியும்:
இத்த‌ல‌த்தின் மூர்த்தி உருவ‌மும் அருவ‌மும் இல்லாத லிங்க‌ரூப‌த்தில் விள‌ங்குகிறார். இந்தலிங்கம் சுமார் மூன்று அடி உயரம் கொண்டதாகும். இம்மூர்த்தி மும்மூர்த்திக‌ளில் அழிக்கும் க‌ட‌வுளுமான‌, ப‌ல்வேறு திருவிளையாட‌ல்க‌ளை புரிப‌வ‌ருமான‌ சிவ‌ன் த‌ன்மிட‌ரிலே ஆழ‌கால‌விட‌த்தை அட‌க்கி ஆத‌லால் கண்டேஸ்வரன் என‌ பெயரும்பெற்று த‌ன் அடியார்க‌ளின்
ஊழ்வினைத‌னை ம‌ழிய‌ச்செய்து த‌ன்திருப்ப‌த‌ம் காட்டி திருவ‌ருள் புரியும் கோமானாக‌ விள‌ங்குகிறார். முன்செய்த‌ வினையால் எழும் இன்ன‌லை, அல்லலை ந‌ழிய‌ச்செய்யும் அவ‌ரின் எல்லையில்லா திருவ‌ருளை இத்த‌ல‌திற்கு வந்தால் க‌ண்டுகொள்ளலாம். உமைக்கு ச‌ரிநிக‌ர் ‌பாக‌ம் த‌ந்த‌ அந்த‌ நாத‌னின் உமைய‌வளான‌ அருள்மிகு அற‌ம்வ‌ள‌ர்த்த‌ நாய‌கி நின்ற‌ கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

அடியார்க‌ள் குழு:
இங்கு ஏராள‌மான‌ அடியார்க‌ள் த‌ங்க‌ளுக்கென‌ குழுஅமைத்து இறைவ‌னுக்கு தொண்டாற்றி வ‌ருகிறார்க‌ள். அவ‌ற்றுள் பிர‌தொஷ‌ வ‌ழிபாட்டு குழு, மார்க‌ழி திருப‌ள்ளியெழுச்சி குழு, ஐய‌ப்ப‌
ப‌க்த்த‌ர்கள் குழு , க‌ந்த‌ர் ச‌‌ஷ்டி முருக‌ ப‌க்த்த‌ர்க‌ள் குழு ஆகியவை முக்கியமானவை.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

One thought on “தாமரை அருள்மிகு கண்டேசுவரர் ஆலயம்

  1. JK

    Let me salute you and your folks for the detailed and articulate information pertaining to Lord Sivan Temple. The synopsis of the temple with simple lyrics are great.

    Affectionate

    P.Palanivel
    Singapore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *