நெருஞ்சிற்காடு-கதைக்களம்

ஆசிரியரின் உரை:

உலகின் முதலனு தமிழன்,முதுமொழி தமிழ் என்னும் பெரும் பேற்றினை ஏற்று அறம் ,பொருள் இன்பம் என்னும் சீரிய பண்பாட்டினை கருவாக கொண்டு திராவிட பாரம்பரியத்தை உருவாக்கி ,நிறைவு பெற்று நிலைத்து நின்ற நாடு நம்நாடு ! இன்றோ அது காலவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு நெருஞ்சிற்காடு போன்று காட்சியளிக்கிறது .பட்ட இடமெல்லாம் குத்துகிறது .

இதனுள் சாதி ,சமயம்,கொள்கை,குழுமம் எனும் கொழுகொம்பு கொண்டு ,பருவ இயல்புக் கேற்ப உள்ளத்தினை உந்தவிடுத்து வாழும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது .ஆங்கே ;இதற்கிடையில் தானே நாமும் வாழ்கிறோம் என்றெண்ணி அழுங்கி அழுங்கிச் சாகும் நல்லுள்ளங்களும் காண்கிறோம் ! நாடு திருந்தும் எனதற்கோ வழிஇல்லை .

எனினும் காட்டாற்று வெள்ளத்தினை அங்கையால் தடுக்க முயல்வது போன்று தன்னால் முடிந்தவரை செய்வோமே என்று முயலும் அறிவுசால் நல் உள்ளங்களையும் ஆங்காங்கு காண்கின்றோம் .அவ்வுள்ளங்களின் பின்னே அடியெடுத்துவைத்து பீடுநடைபோட எண்ணியே இந்த நூலை வடித்து தங்கள் முன் வைக்கிறேன் .

இந்த நூலானது முழுதும் கற்பனை வடிவம் கொண்டது ! கருத்துகளே என் உள்ளபாங்கு ! அறிவுலகம் இதை ஏற்கும் என்ற உணர்வோடு எழுதிஉள்ளேன் .

கதைக்களம்:

இந்த நூலை பொருத்தவரை பொருந்தா திருமணத்தால் எழும் இன்னல்களை அழகாக படம் போட்டு காட்டுகிறார் .கதையில் முக்கிய கதாபத்திரம்மருதைதனது முதல் மகள்பூங்கொடிக்குநாகசுந்தரம்என்பவனை திருமணம் செய்து வைக்கிறார் .அவனது குடும்பமோ பண்பாடில்லாத குடும்பமாக இருக்கிறது .இதனால் எழும் இன்னல்களையும் ,நிம்மதி அற்ற சூழ்நிலைகளையும் தனக்கே உரிய பாணியில் கவிதையோடு கலந்து இயற்றி உள்ளார் .

ஒருகட்டத்தில் அதே குடும்பத்தில் இருந்து தனது மகனுக்கு பெண் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் .மருமகளும் பண்பாடில்லாத பெண்ணாக இருப்பதால் மருதை அவல நிலைக்கு ஆளாகிறார் .மகனும் முழுநேர குடிகாரனாக மாறிவிடுகிறான் .இந்நிலையில் தனது இரண்டாவது மகனுக்குஅவன் விரும்பிய இடத்தில் மணமுடிக்கிறார் .அதுவும் சரிஇல்லாமல்போகவே மிகவும் மனமுடைகிறார் .

தனது மற்றுமொரு மகள் திருமணம் ஆகாமல் இருபது வேறு அவரை வாட்டுகிறது .இந்நிலையில்தென்னன்என்பவனை எதார்த்தமாக சந்திக்கிறார் .ஒருமுறை அவர் வழுக்கி விழும்போது அவன் இவரை காப்பாற்றுகிறான்.அதன் நட்பாகி கதையின் இறுதியில் அவனையே தனது மகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார் .

இதற்கிடையில் முதல் மகள் வரதட்சனை கொடுமையால் பிறந்த வீடு திரும்புகிறாள் . அவளது கணவன்(நாகசுந்தரம்) பொறுப்பில்லாமல் சுற்றி திரிந்து விட்டு இறுதியில் மனைவியை கொலை செய்ய நண்பனுடன் திட்டம் தீட்டுகிறான்.ஆனால் வந்த இடத்தில் பாம்பு கடித்து இறக்கிறான் .ஆனால் அவனுடைய நண்பன் பூங்கொடியை கொலை செய்து விட்டு சென்று விடுகிறான் .மகளை இழந்த மருதை அழுது புலம்புகிறார் .இப்படி செல்கிறது கதை .கதையில் ஆங்காங்கே திராவிட கொள்கைகளின் தாக்கம் தென்படுகிறது.

சுவாமி ஐயப்பனையும்,அய்யனாரையும் ஒன்று என்று கூற விழைகிறார் .சில மூட நம்பிக்கைகளாலும் ,பழக்க வழக்கமும் மனிதனை எந்த அளவுக்கு வேதனையடைய செய்கின்றன என்பதை கதையில் வரும் சில கதாபத்திரங்களின் மூலம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் ,உழவர்கள் படும் துன்பத்தை மருதை மூலம் கூறி இருக்கிறார் .பல நாள் போராடி உழைத்து பயிர் செய்யும் ஒருவனை விட அதை வாங்கி விற்கும் ஒருவன் அதிகமாக சம்பாதிக்கிறான் ,உழைப்பவன் பெறுவது சொற்பமே என்பதை தனது கவிதை மூலம் தெரிய படுத்துகிறார் .இது என்னவோ தற்போதும் நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே .

பண்பாடில்லாத குடும்பத்தை நெருஞ்சிர்காடு என்று கூறுகிறார் .நெருஞ்சில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் ,ஆனால்,அதன் மீது அடி வைத்தால் குத்தி குருதி பார்த்து விடும் ,அதுபோல பணத்தை கண்டு பண்பாட்டை மறந்து பெண் எடுத்தாலும் ,கொடுத்தாலும் வாழ்கையில் நிம்மதி போய்விடும் என்பதை கதையின் கருவாக கொண்டுள்ளார்.நமது புலவரின் இந்த நூலானது ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கான முதல் படி என்று கூட சொல்லலாம் .ஒரு குடும்பம் எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாரணம் இவரது மருதையின் குடும்பம் என்று கூட சொல்லலாம் .கவிஞர் பாரதிதாசனும் தன்னுடையஇருண்ட வீடுஎனும் நூலில் இதே கருத்தை கூறி உள்ளார் என்பது சிறப்பு .

மீண்டும் புலவரின் மற்றுமொரு நூலானமுதுமொழிப்பாவைஎனும் நூல் பற்றிய சிறு குறிப்போடு சந்திப்போம் …….

Like and Share

நெருஞ்சிற்காடு-அணிந்துரை

நமது புலவர் திரு.க.விசுவலிங்கம் அவர்கள் இயற்றிய “ நெருஞ்சிற்காடு”  எண்ணும் இந்நூலில் மொத்தம் 14  கதைபாத்திரங்களை பயன்படுத்தியுள்ளார்.அவற்றின் பெயர்கள் கீழ்கண்டவாறு விவரிக்கபட்டுள்ளன.

1.மருதை நாயகம் :கிழவன்,பூங்கொடியின் தந்தை.

2.நன்னன்:மருதை நாயகத்தின் முதல் மகன்,நாகவல்லி கணவன்.

3.மணிமொழி :மருதை நாயகத்தின் இரண்டாவது மகன்.

4.தென்னன்:தேன்மொழியின் காதல் நண்பன்.

5.பூங்கொடி:மருதை நாயகம் மகள்,நாகசுந்தரம் மனைவி.

6.தேன்மொழி:மருதை நாயகம் இரண்லாவது மகள்

7.நாகசுந்தரம்:பூங்கொடி கணவன்

8.நாகவல்லி:நன்னன் மனைவி,மருதை நாயகம் முதல் மருமகள்.

9.முருகன்:பணியாளன்.

10.அமுதாள்:முருகன் மனைவி.

11.நாரணன்:கோயிற் பணியாளன்.

12.விரலிகூத்தன்:நாகசுந்தரம் நண்பன்.

13.செல்வநாயகம்:தென்னனின் நண்பன்.

14.சுயம்பு: தென்னன் நண்பன்.

மற்றும் உழவர்கள்,நடுநிலையாளர்கள்.

இக்கதை 5 களங்களாகவும்,3 அங்கமாகவும் இயற்றப்படுள்ளது.ஒவ்வொரு அங்கமும் எந்த இடத்தில்,எப்பொழுது (இடம்,நேரம்) நடைபெறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலிற்கு அணிந்துரை அளித்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் துறைத்தலைவர் முனைவர் திரு.தமிழண்ணல் அவர்களுடைய கருத்து:

பொருந்தா மணத்தால் பூங்கொடி-மருதைநாயகம் மகள் நெருஞ்சிற்காடினுள் அகப்பட்டு தவித்து தன் கணவன் நாகசுந்தரமும் அழியத் தானும் அழிய நேர்கிறது.இவ் அவல நாடகம் சூழ்நிலையான் மாந்தன் கெட்டழிவான் என்பதை கருவாகக் கொண்டு இயங்குகிறது.”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினுள்ளே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனீரே” என்ற நாட்டுபுறப்பாடல் கணவனை இழந்த காரிகையின் கதறலாகும்.இங்கு பூங்கொடி தானும் மாய்ந்து,அவலத்தின் உச்சியை அடையக் காண்கிறோம்.

தாமாக கற்று தமிழில் கவிபாடும் க.விசுவலிங்கம் புனைந்துள்ள ”நெருஞ்சிற்காடு” என்ற இக் கவிதை நாடகம் ஒரு நாட்டுப்புறப் பாடல்போலவே,இனிதாய் எளிதாய் ‘சிந்து பாடும் சிற்றருவி’ என நடைபயில்கிறது.அறிஞர் அண்ணவால் தகுதிச் சான்று வழங்கப்பெற்ற இவ்வியற்கை கவிஞர் நல்ல பல தன் அனுபவ மொழிகளின் தொகுப்பாகவே இந்நூலை யாத்துள்ளார்.கதையை காட்டிலும் கருத்தில் மிகுந்த அக்கறை செலுத்தும் இந் நடகத்தில் நமது அன்றாட வாழ்விற்கான நடைமுறை-பட்டறிவு விளக்கங்களை நூல் முழுவதும் காண்கிறோம்.

பண்பா டில்லா இனத்தினுள் பெண்ணைத்

திருமணம் செய்து கொடுத்தலும் கொடுத்துத்

திரும்ப பெண்ணை பெறுதலும் முறையாய்க்

காக்கும் தகுதி இல்லா ஒருவனைக்

கணவன் என்ன ஏற்றே அவனுடன்

நிலைத்து வாழ நிற்றலும் பிறரை

ஒழுங்கு படுத்த ஒவ்வாச் சூழலில்

பெண்ணைக் கொடுத்து வாழ விடுத்தலும்

என்றும் தீங்கு பயப்பதாம்.

சூழல் மாந்தனைக் கெடுக்கும்;அதனால் பொருந்தாமணமும் நெருஞ்சிற்காட்டினுள் அகப்பட்ட நிலைமையையே உண்டாக்கும்.இதுதான் இந்நூல் தரும் உயிரான கருத்து.

மனித வாழ்வில் எத்தனை சடங்குகள்;எத்தனை வீண் செலவுகள்!”பிறந்த நாள் தொட்டே இறக்கும் வரைக்கும் எண்ணிப் பலப்பல தெளியாச் சடங்குகள்”!வாழ்க்கையை ஒருமுறை வறளவிட்டுவிட்டால் அதை திரும்ப பெறுவது மிகமிகக் கடினமே!”எத்தகு முயற்சி செய்யினும்  …வாழ்வைத் திரும்பப் பெறுவதென்பதோ எளிதென எண்ணற்கில்லை”

உணவு போன்றவற்றை உண்டாக்குபவன் ஒரு பங்கு பெற்றால்,அதை வாங்கிவிற்க்கும் வணிகன் பத்துப்பங்கு பெறுகிறான்.இக் கொடுமை இன்றும் நிகழ்கிற்து.

இட்டலி அம்பது காசு!அதையே தோசையாக்கினால் இரண்டரை ரூபாய்! அம்மட்டோ!

………….அதனையே

கொஞ்சம் அழுத்தித் தேய்ப்பின் அதன்விலை

மூன்றரை ரூபாய் என்பான்! அதனையே

மேலும் அழுத்தித் தேய்ப்பின் அதன்விலை

நான்கரை ரூபாய் என்பான்! இடையினில் தண்ணீர் ஊற்றித் துடைப்பதைத் தவிர

வேறென் மாற்றம் செய்தனன்!”

இவ்வாறு நகைச்சுவை பெற நாட்டுநடப்பைக்

காட்டுமிடங்கள் இதிற்பலவுள!”சூழ்நிலை வருத்த நேரின் எவனுமே நிலைத்து நிற்க இயலாது”என்பது இவர்தம் அறிவுரை!

பெற்றோர் அணைப்பில் அன்றிப் பிறிதொரு

பிணைப்பில் வாழும் பிள்ளைகள் எதுவும்

தேறி வருதல் இல்லை!

முன்னேறிய நாடுகள் எல்லாம் படும் அல்லல் இது.

இப்பகுதி முழுவதும் பெற்றோர் படிப்பது நல்லது.

சமயச் சார்பின்றி வளர்ந்த் தமிழினம்,இன்று புறச்ச்மயச் சார்புகளால் தள்ளாடுவதையும் பண்பாடு சிதைவதையும் நன்கு சுட்டிக்காட்டுகிறார்.தென்னையின் ஆக்கும் இயல்பையும் மூங்கிலின் அழிக்கும் தன்மையையும் ஆக்கும் இயல்பையும் மூங்கிலின் அழிக்கும் தன்மையையும் இவர் குறிப்பிடுவது,இவர்தம் இயற்கை பற்றிய நுண்ணரிவை விள்க்குகிறது.தமிழன் நான்குமொழிகள் கற்கும் கட்டாயத்திலுள்ளான்.தாய்மொழி,சமயமொழி,தெசியமொழி,உலகமொழி என எம் மொழி கற்பினும் “ஒழுக்க உணர்வை ஊட்டும் தமிழ்மொழி ஒதுக்கபட்டு நிற்பதால் உலகில் ஒழுக்க உணர்வோ குன்றுதும்”என்று வருந்திக்கூறுகிறார்.

உலகில்உயிர் அணுஎதுவும் தோன்றாமுன் தோன்றிஒலி

உணர்வாய் நின்று

உலவிஉரு வடிவாகி உயிராகி மெய்யாகி

உயிர்மெய் யாகி

நிலவுமெழில் வடிவாகி நின்றுலவும் தமிழணங்கே!

எனும் இவரது தமிழ்ப்பற்று போற்றுத்ற்குரியதாகும் என புலவரின் தமிழ்ப்பணி மேலும் வளர வாழ்த்துகிறார்.

Like and Share

நெருஞ்சிற்காடு-முன்னுரை

 

அன்புள்ள தாமரங்கோட்டை நண்பர்களுக்கு! நமது ஊரில் உள்ள படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புகளையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் பொருட்டு ,அண்ணன் JK அவர்களின் விருப்பத்தின்படி,முதல் முயற்சியாக புலவர் திரு . விசுவலிங்கம் அவர்களின் நெருஞ்சிற்காடு அவர்களின் நூலை கையில் எடுத்துள்ளோம்.  

புலவரை பற்றிய அறிமுகம் முன்னதாகவே இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது .இந்த நூலை பற்றி பேசுவதற்கு முன்…. நமது கவிஞரை தற்போது ஊரில் வாழும் பெரியவர்களுக்கு நன்றாக.ஆனால் வளரும் தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.கிட்டத்தட்ட ஆறு நூல்களையும் பல கவிதைகளையும் இயற்றிய இவரின் திறமை நமது பகுதியை விட்டு வெளிவராமல் போனது சற்றே ஏமாற்றம்.

மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்பது உலக நீதி.ஆனால் தற்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு,குணாதிசயங்களையும்,கொள்கைகளையும் மாற்றி கொள்கிறவனே வெளி உலகிற்கு தெரியவருகிறான்.

வெளி உலகிற்கு பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதுபவர்கள் மேற்கண்ட உத்தியை கையாண்டு வருகிறார்கள்.உதாரணமாகஇது ஒரு பொன்மாலை பொழுதுஎழுதிய அதே வைரமுத்துவின் கைகள் தான்கட்டிபுடிடாஎன்ற பாடலையும் எழுதியது.ஆனால் எழுதிய காலங்கள் வேறு.இன்னும் சிறந்த பாடல்களை அவரால் இயற்ற முடியும் ஆனால் காலம் ஏற்று கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் நமது புலவருக்கு தமிழ் வளர்ச்சி கொள்கை மட்டுமே பெரிதாக தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.அதனால்தான் தன்னை மாற்றிகொள்வதில் அவர் முக்கியத்துவம் காட்டவில்லை என்றே எண்ணுகிறோம்.

மேலும் நமது ஊரை எடுத்துகொண்டோமானால் இதுவரை புலவரை போன்ற படைப்பாளிகளை ஊக்குவிக்க எந்த நிகழ்ச்சயும் நடந்தாக தெரியவில்லை.ஊரில் அரசியல் நடத்தும் மக்கள் பிரதிநிதிகள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று யாம் எண்ணுகிறோம்.அரசியல் என்பது வாக்குகளோடும் பதவிகளோடும் முடிந்து விடுவதல்ல,அரசியல் என்பது மக்கள்தொண்டு என்ற வார்த்தையோடு நெருங்கிய தொடர்புடையது என்றே யாம் எண்ணுகிறோம்.திறமைகளை ஊக்குவிப்பதும் ஒருவகை மக்கள்பணி என்று யாம் எண்ணுகிறோம்.ஆனால் நமது ஊர் அரசியலை பற்றி பேச எமக்கு எண்ணமில்லை.ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இங்கே நினைவுபடுத்த விழைகிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நமது ஊரில் வேட்பாளர்களுக்கென்று தனியாக ஒரு வேண்டுகோள் அறிக்கையும் ,பொது மக்களுக்கென்று ஒரு வேண்டுகோள் அறிக்கையும் வெளியிடப்பட்டது.குறைந்தபட்சம் அதை பின்பற்ற முயற்சிசெய்தாலாவது ஒரு தெளிவான மக்கள் பிரதிநிதியாகவும்,சிறந்த பிரதிநிதியையும் பெற முடியும் என்று யாம் எண்ணுகிறோம்.தேவைப்பட்டால் உரியவரை தொடர்பு கொண்டு அதை வெளியிட முயற்சி செய்வோம்.

ஓவியம்:நானிலவேந்தன்

 

மேலும் இளைய தலைமுறை படைப்பாளிகளை இப்போத்திருந்தே ஊக்குவிப்பதும் அவசியமான ஒன்று என கருதுகிறோம்.வெளி வராத எண்ணங்களையும் ,படைப்புகளையும் வெளி இடுவதே எமது முயற்சியின் நோக்கம்.மேற்கண்ட விடயங்கள் யாரையும் பாதிக்காது என்றே எண்ணுகிறோம்,யாரையும் பாதித்து இருந்தால் அதற்காக வருந்துகிறோம் என்று யாம் சொல்லமாட்டோம்,ஏன் என்றால் அதை அவர்கள் மீது யாம் எடுத்து கொண்ட உரிமையாக கருதுகிறோம்.

 

கதைக்களம் அடுத்த பதிப்பில் இருந்து தொடங்கும்.குளத்தில் ஒரு சிறிய கல்லை எறிகிறோம்.அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை கொண்டே எமது அடுத்தடுத்த முயற்சிகளை செய்வோம்.அடுத்த பதிப்பில் சந்திப்போம் …………………….

Like and Share

தாமரன்கோட்டை தளம் முழுவதுமாக புது வடிவமைப்பில்

தாமரன்கோட்டை தளத்தின் புது வடிவமைப்பை சில காலம் வெள்ளோட்டமாக விட்டிருந்தோம். அது உங்களுக்கு தெரிந்திருக்கும். சில குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு இப்பொழுது மொத்த தளத்தையும் இந்த புது வடிவமைப்பிற்கு மாற்றியுள்ளோம். இந்த புது வடிவமைப்பின் மூலம்,

 1. பதிவுகளையும் கட்டுரைகளையும் எளிதாக வகைப்படுத்தலாம்.
 2. இடது புறத்தில் உள்ள இணைப்புகள் அந்த வகைகளின் மூலம் தானாக மாறிக்கொள்ளும். அந்த இணைப்புகளைச் சொடுக்குவதன் மூலம் வரும் பக்கம் அந்த வகையில் உள்ள முதல் 10 இடுகைகளை ஒருங்கே கண்பிக்கும்.
 3. தள மேலாண்மையை எளிதாக ஒரே இடத்தில் இருந்து செய்துவிடலாம்.
 4. எல்லா இடுகைகளுக்கும் வாசகர்கள் பின்னூட்டம் இடலாம்.
 5. புதிய வகைகளை எளிதாகச் சேர்க்கலாம்.
 6. எல்லா உலாவிகளிலும் தளம் நன்றாகத் தெரியும்.

இந்த வடிவமைப்பில் தொலைபேசி அட்டவணை இணைக்கப்படவில்லை. மேலும் முன்னர் இருந்த தொலைபேசி அட்டவணையும் சரியாக வேலை செய்யவில்லை. இந்த வசதி தேவையென நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் அதை சேர்க்க முயற்ச்சிக்கலாம்.

தளத்தின் வடிவமைப்பில் அல்லது செயல்பாட்டில் ஏதேனும் குறைகள் இருப்பினும் அல்லது தளத்தை மேம்படுத்த உங்களிடம் ஏதும் ஆலோசனை இருப்பினும் தெரிவியுங்கள்.

எல்லாவற்றையும் விட தளத்தை பயனுள்ளதாக்குவதற்கு அவசியத் தேவை ஊரிலிருந்து வரும் அன்றாடச் செய்திகள், புகைப்படங்கள் அல்லது அது தொடர்பான கட்டுரைகளே. ஊர்கூடித் தேரிழுத்தால் தானே ஓடும். அதுபோல நீங்கள் எல்லாம் பங்களித்தால் தான் தளம் மேலும் பயனுள்ளதாகும்.

இது தவிர உங்களது கலைப் படைப்புகளையும்( கவிதை, கதை, கட்டுரைகள்) பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த குழுமத்தில் இல்லாத நண்பர்களையும் பங்களிக்கச் சொல்லுங்கள்.

Blogger இல் இருக்கும் தாமரை நெட்வொர்க் வலைப்பதிவில் இனிமேல் பிரதானமாக இடுகைகள் வராது. இந்த தளத்தில் வரும் புது கட்டுரைகளுக்கு சுட்டிகள் மட்டும் அங்கே இடப்படும். தாமரை நெட்வொர்க் வலைப்பதிவில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் அனைவரும் இந்த தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் புதுக் கட்டுரைகள் எழுதுவதற்கான நிரலனுமதியை வழங்குகிறேன்.

Like and Share

தாமரன்கோட்டையைச் சேர்ந்த புலவர் க. விசுவலிங்கம்

தாமரன்கோட்டையைச் சேர்ந்த கவிதைச் செல்வன் க. விசுவலிங்கம் அவர்கள் சுக்கில ஆண்டு சித்திரைத் திங்கள் பதினொன்றாம் நாள்(23-04-1929) செவ்வாய்க்கிழமை பிறந்தார். இவரது தந்தை கந்தசாமி, தாயார் தையல்நாயகி. இவர் கூட்டுறவுத் துறையில் களமேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் தமிழ்நாடு அரசால் தெரிவு செய்யப்பெற்ற முதிர்ந்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவர். இவர் இயல்பாகவே பாக்கள் புனையும் ஆற்றல் பெற்றவர்.

இவர் இதுவரை ஆறு கவிதை நூல்களை பதிப்பித்துள்ளார்.

 1. தமிழ்ச்சுடர் – கவிதை
 2. இதயத்தின் எதிரொலி – கவிதை நாடகம்
 3. புனையா ஓவியம் – கவிதை நாடகம்
 4. நெருஞ்சிற்காடு – கவிதை நாடகம்
 5. முதுமொழிப்பாவை – பாவியல், கவிதை
 6. எழில்மிகு திராவிடம் – மரபியல், கவிதை

இவரைப் பற்றி

பேரறிஞர் அண்ணா அவர்கள்

கவிதைச் செல்வன் எனும் பெயருடைய இளைஞன், காவிய நடையில், தமிழர்க்குக் கருத்தளிக்க இயற்றிய இதயத்தின் எதிரொலி எனும் ஏடு கண்டு ஆங்கதனில் பீடுநடையும், பல்சுவையும், பயன்பலவும் பெய்திருக்கக் கண்டு பெருமகிழ்வு கொள்கிறேன்.

தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழன் இன்று தாழ்நிலை யுற்றது கண்டு மனம் வெதும்பி உள்ளோர், மீண்டும் தமிழர் மாண்புடன் வாழ்ந்திடல் வேண்டும் என்று விழைகின்றனர் – முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதயத்தின் எதிரொலி அவ்வித முயற்சிகளில் ஒன்று என்று கண்டு, இயற்றிய இளைஞரைப் பெரிதும் பாராட்டுகிறேன். நற்கருத்துகள் கொண்டுள்ளார் என்பதாலும், தமிழின் இனிமை துள்ளும் நடையழகு காட்டியுள்ளார் என்பதாலும், வாழ்க தமிழார்வம்!

அன்பன்

அண்ணாதுரை

முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள்

அன்பர் திரு. க. விசுவலிங்கம் அவர்களால் எழுதப்பெற்ற புனையா ஓவியம் என்ற நூல் ஒன்று என் பார்வைக்கு வந்தது. படித்து மகிழ்ந்தேன். நூல் முழுதும் கவிதைகளால் அமைந்த காப்பியமாகக் காட்சியளிக்கிறது.

கவிதைகல் சொல்லில் இனிமையும், நடையில் எளிமையும், கருத்தில் ஆழத்தையும் கொண்டு திகழ்கின்றன.

ஆசிரியர் க.விசுவலிங்கம் அவர்கல் இதுபோன்ற காப்பியங்கள் பலவற்றை எழுதித் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வேண்டுமெனவும் விரும்பி வேண்டிக்கொள்கிறேன்.

தங்களன்பிற்குரிய

கி. ஆ. பெ. விசுவநாதம்.

Like and Share

தாமரன்கோட்டை கூகிள் குழுமம்

தாமரன்கோட்டை கூகிள் குழுமம் தொடங்கப் பட்டுள்ளது. தாமரன்கோட்டையைச் சேர்ந்த அனைவரையும் இதில் பங்கேற்க அழைக்கிறேன்.

நமது ஊர் தொடர்பான எல்லா விடயங்களையும் இந்த குழுமத்தில் பகிர்ந்துகொள்ளலாம், விவாதிக்கலாம். தற்சமயம் தாமரன்கோட்டை.காம் தளம் மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த குழுமத்தை பயன்படுத்தலாம்.

ஆர்வமுள்ளவர்கள் http://groups.google.com/group/thamarankottai முகவரிக்குச் சென்று உங்களையும் குழுமத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Like and Share

தாமரன்கோட்டை.காம் புதிய வலைத்தளம்

வெகு நாட்களாக உருவாக்கத்திலிருந்த தாமரன்கோட்டை.காம் வலைத்தளத்தை இன்று சற்று மேம்படுத்தி வெள்ளோட்டம் இட்டிருக்கிறோம். இப்பொழுதும் அதிக தகவல்கள் இல்லாது தொடக்க நிலையிலேயே உள்ளது. வருங்காலங்களில் சில நண்பர்களின் உதவியுடன் இத்தளம் மேம்படுத்தப்படும்.

முதலில் ஊரைப்பற்றிய அறிமுகம், செய்திகள்(இந்த வலைப்பதிவின் மூலம் வெளியிடப்படும்), சில புகைப்படங்களைத் தாங்கி இந்த தளம் அமையும். நண்பர்களின் பின்னூட்டங்களைப் பொருத்து மேம்பட்ட சேவைகள் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு குழுமத்தையும் இணைக்கும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இணைய வசதியுள்ள நண்பர்களின் ஒத்தாசையிருந்தால் இன்னும் சிறப்பாக செய்யலாம். இதை வாசிப்பவர்கள், உங்களது கருத்துகளை தவறாமல் பின்னூட்டப்(comments) பெட்டியில் தெரிவிக்கவும்.

Like and Share

தாமரன்கோட்டை வலைத் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்

தாமரன்கோட்டை பற்றிய தகவல்களையும் செய்திகளையும் இந்த தளத்தின் மூலம் வலை உலகத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

நீங்கள் தேடி வந்த தகவல் இங்கே கிடைக்கவில்லை என்றாலோ, இந்த தளத்தை மேலும் பயனுடையதாக்க உங்களிடம் யோசனை இருப்பின் தள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Like and Share

அன்புள்ள நண்பர்களே

உலகின் பல திசைகளிலும் பரவிக்கிடந்து சாதனைகள் புரிந்து வரும் அன்புள்ள தாமரன்கோட்டையைச் சேர்ந்த நண்பர்களே, உங்களுக்கு எனது கனிவான வணக்கங்கள்.

தாமரன்கோட்டை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ளவும், நமது ஊர் முன்னோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் வலைநுட்பத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இப்பொழுதே அது நிறைவேறியது, இந்த வலைப்பதிவினை தொடங்கியதன் மூலமாக.

நமது இளைய சமுதாயத்தின் சாதனைகள் நம்பிக்கையையும் பெருமையையும் அளிக்கிற அதே சமயத்தில், நம் மக்களை முன்னோக்கியிருக்கும் பிரச்சனைகளும் மலைக்கவைக்கிறது. இப்பதிவை நீங்கள் சென்னையிலிருந்தோ, பட்டுக்கோட்டையிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, சிங்கப்பூரிலிருந்தோ அல்லது உலகின் வேறு ஏதாவது ஒரு மூலையிலிருந்தோ படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தாமரன்கோட்டை பற்றிய இப்பதிவை அனேகமாக தாமரன்கோட்டையில் இருந்து மட்டும் படித்துக் கொண்டிருக்கமாட்டீர்கள் என திடமாகவும் வருத்தத்துடனும் நம்புகிறேன். ஒன்று வேலைக்காகவோ, கல்விக்காகவோ வெளியூரில் இருப்பீர்கள். இரண்டாவது, தாமரன்கோட்டையில் இருந்தால், வலைப்பதிவுகளைப் படிக்க இணைய இணைப்பு இருக்காது. உலகம் வெகுவேகமாக வளரும் இக்காலகட்டத்தி்லும் நாம்மூர் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதை விளக்குவதற்கு இது ஒன்றே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

நம் பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க நாம் இப்பதிவை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் அனைவரையும் இதில் எழுத அழைக்கிறேன். நீங்கள் பங்களிக்க விரும்பினால் ஒரு பிளாக்கர் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டம் வழியாக தெரிவியுங்கள். பங்களிப்பாளராக சேர்த்துவிடுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

ஜெயக்குமார் – ஜேகே

பின் குறிப்பு: உங்களுக்கு தமிழில் எழுத தொழில்நுட்ப பிரச்சனை இருந்தால் ஆங்கிலத்தில்கூட எழுதலாம். தமிழில் எப்படி இணையத்தில் எழுதவது என அறியவேண்டுமெனில் எனக்குத் தெரிவியுங்கள்.

Like and Share

வரவேற்பு

தாமரன்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[1] உட்பட்ட ஒரு விவசாய கிராமம். பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் தாமரன்கோட்டை அமைந்துள்ளது. இந்த வலைப்பதிவு இவ்வூர்ச் செய்திகளையும், மக்களின் பிரச்சனைகளையும், தீர்வுகளையும் எடுத்தியம்பவும் விவாதிக்கவும் முற்படுகிறது.

Like and Share